ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்ஆழ்வார் கோவிலில் நவதிருப்பதி பெருமாள்களின் கருடசேவை
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பிரமோட்சவ விழாவை முன்னிட்டு நவதிருப்பதி பெருமாள்களின் கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பிரமோட்சவ விழாவை முன்னிட்டு நவதிருப்பதி பெருமாள்களின் கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
பிரமோட்சவ விழா
ஆழ்வார்திருநகரியில் நவத்திருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவாமி நம்மாழ்வார் திருஅவதாரம் செய்த வைகாசி மாதம் விசாக திருநட்சத்திரத்தை முன்னிட்டு பிரமோட்சவ விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 5-ம் நாளான நேற்று முன்தினம் காலை மங்களாசாசனத்தை முன்னிட்டு 9 பெருமாள்களும் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கருடசேவை
நேற்று முன்தினம் இரவில் ஆழ்வார்திருநகரி பொலிந்துநின்ற பிரான், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள், நத்தம் எம்இடர்கடிவான், இரட்டை திருப்பதி தேவப்பிரான் மற்றும் அரவிந்தலோசனர், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன், திருக்கோளுர் வைத்தமாநிதி, ஆகிய 9 பெருமாள்களின் கருடசேவையும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கப்பல்லக்கிலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்கள் குவிந்தனர்
இந்த நிகழ்ச்சியில் வெளிமாவட்டங்களில் இருந்தும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நவத்திருப்பதி பெருமாள்களையும், நம்மாழ்வாரையும், மதுரகவி ஆழ்வாரையும் தரிசனம் செய்தனர். வருகின்ற 11-ந்தேதி 9-ஆம் திருநாளன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறும். 10-ஆம் திருநாளன்று தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறும். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.