கார்த்திகை தீபத்திருவிழா: பழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்...!

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Update: 2022-12-06 09:22 GMT

பழனி,

கார்த்திகை தீபத்திருவிழா முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டு தலுடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாலையில் சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்பட்டது. பின்னர் பரணி தீபத்தில் இருந்து சுடர் பெறப்பட்டு மலைக்கோவிலில் 4 திசைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கே சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைக்கு சின்னக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மேள தாளம் முழங்க சிவாச்சாரியார்களால் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்பட்டது.

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் இருந்தே ஏராளமாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பழனி மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் படிப்பாதைகளில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், மலைக்கோயிலுக்கு சென்று வரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்