மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது -அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Update: 2023-07-10 00:03 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக அரசு கூறுவது அவர்களின் அரசியலுக்காகத்தான். அவர்களால் மேகதாது அணையை கட்ட முடியாது. காரணம் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்,

சுற்றுச்சூழல்துறை, வனத்துறை, காவிரி நதி நீர் ஆணையம், எல்லாவற்றையும் விட தமிழக அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வளவு சீக்கிரம் அணை கட்ட முடியாது.

நாங்களும் அணையை கட்ட விட மாட்டோம். ஒப்புதலும் தர மாட்டோம். நீதிமன்றம் செல்வோம்.

தமிழக அரசு அனுமதிக்காது

ஒரு போதும் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது. நாங்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டோம். தமிழகத்தில் ஆறுகளில் சிறிய தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

பாலாற்றில் வெட்டுவாணம், சேண்பாக்கம், திருப்பாற்கடல், பசுமாத்தூர் உள்பட பல இடங்களில் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வருகிறோம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் கனிம வளங்களில் அரசுக்கு ரூ.1,700 கோடி இழப்பு ஏற்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்து ரூ.1,700 கோடி நஷ்டத்தை பூர்த்தி செய்து பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளத்தை வெட்டி எடுத்தவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்து சரி செய்துள்ளோம். எங்கள் ஆட்சியில் எந்தவித கனிமவள முறைகேடுகளும் நடக்கவில்லை.

மகளிர் உரிமைத்தொகை

மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவதில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது உண்மையல்ல. யாருக்கு வழங்க வேண்டும் என எழுதிகொடுத்தால் வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்