கர்நாடக முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்

மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று தெரிவித்துள்ள கர்நாடக முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-17 04:44 GMT

சென்னை.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடக மாநில முதல்-மந்திரி அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஏற்கனவே தனியாக ஒரு திட்ட மண்டலம் மற்றும் இரண்டு துணை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும், அணை கட்டப்படும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பினை அடையாளப்படுத்தும் பணி, வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை ஆகியவை ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டதாகவும், தேவையான அனுமதி பெற்ற பின்பு இந்தப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் துவங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை அவமதிப்பதோடு, தமிழ்நாட்டின் உரிமையினை பறிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் வந்ததிலிருந்தே, மேகதாது அணை கட்டப்படும் என்று தொடர்ந்து அம்மாநில முதல் -மந்திரியும் , துணை முதல்-மந்திரியும் பேசி வந்த நிலையில், தற்போது இதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது தமிழ்நாட்டு மக்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணையை கர்நாடகா கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேகதாது அணை கட்டப்படாத நிலையிலேயே, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை. மாறாக, உபரி நீர் மட்டும்தான் தமிழ்நாட்டிற்கு வருகிறது.

இந்த நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால், வருகின்ற உபரி நீரும் வந்து சேராத நிலை உருவாகும். மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எனவே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் , கர்நாடக முதல்-மந்திரியிடம் தனக்குள்ள செல்வாக்கினை பயன்படுத்தி, மேகதாது அணை கட்டும் திட்டத்தினை கைவிட வலியுறுத்தவும், தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசினை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும், இது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மத்திய அரசிடம் முறையிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்