கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி, சென்னை மயிலாப்பூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாட வீதிகளில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2023-03-28 04:46 GMT

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா 28-ந்தேதி (இன்று) முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

அதாவது தேவடி தெருவில் இருந்து - நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வடக்கு நோக்கி, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, வடக்கு சித்ரகுளத்தில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, மேற்கு சித்ரகுளம் தெரு, டி.எஸ்.வி. கோவில் தெரு, ஆடம்ஸ் தெரு மற்றும் ஆர்.கே. மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு நோக்கி, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வடக்கு மாட தெரு நோக்கி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு நோக்கி, லஸ் சந்திப்பு, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கி, முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் இருந்து கல்விவாறு தெரு நோக்கியும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவத்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை, வெங்கட கிருஷ்ணா ரோடு, தேவநாதன் தெரு, செயின்ட் மேரீஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளி அடையலாம்.

அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி சந்திப்பு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம். மயிலாப்பூர் கோவில் குளம் அருகில் உள்ள மாநகர பஸ் நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.

வருகிற 30-ந்தேதி அதிகாரநந்தி திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், ஏப்ரல் 3-ந்தேதி தேர் திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் ஏப்ரல் 4-ந்தேதி அறுபத்து மூவர் திருவிழா பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும், மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

வருகிற 30 மற்றும் ஏப்ரல் 3, 4-ந்தேதிகளில் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

கிழக்கு மற்றும் வடக்கு புறம் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் தெற்கு புறம் இருந்து வரும் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம், திருமயிலை பறக்கும் ரெயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ். பள்ளி அருகே கபாலீசுவரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்