மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள்

கடுமையான சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தினால் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துவிட்டது.;

Update: 2024-03-19 08:37 GMT

கன்னியாகுமரி,

உலக புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம்.

இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி  ஆகிய 3 மாதங்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளும் மற்றும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது.

மேலும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களும் கோடை விடுமுறை காரணமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இது தவிர பண்டிகை விடுமுறை காலங்களிலும் வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், கடுமையான சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தினாலும் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துவிட்டது. குறிப்பாக வட மாநில சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துவிட்டது.

இதனால் கன்னியாகுமரியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சுற்றுலா தலங்களும் ஆட்கள் நடமாட்டம் இன்றி களை இழந்து காணப்படுகிறது.

கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காலை நேரத்திலும் சூரியன் மறையும் மாலை நேரத்திலும் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்