கஞ்சா விற்பனை அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை

கீழக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-29 16:18 GMT

கீழக்கரை, 

கீழக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகராறு

கீழக்கரையில் கடந்த வருடம் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா விற்பனை ஒழிக்கப்பட்டது.தற்போது இந்த பகுதியில் மீண்டும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

இதனால் மாணவர்கள், இளைஞர்கள் தகாத பழக்கத்தில் ஈடுபட்டு வருவதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கீழக்கரை வடக்கு தெரு மணல்மேடு பகுதி, இந்துக்கள் மயான கரை, கடற்கரை பகுதி, பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மீன் கடை, ரக்மானியா நகர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வாலிபர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. வாலிபர்கள் கஞ்சாவை குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்குமுன்பு வடக்கு தெரு ஜமாத்துக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியில் அம்ஜத் என்பவரை 5 பேரை கொண்ட மர்ம கும்பல் போதையில் வழி மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள கொந்த கருணை அப்பா தர்காவிற்கு இரவு நேரங்களில் அதிகமான பெண்கள், குழந்தைகள் வருவதால் பாதையில் நின்று கொண்டு சில வாலிபர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் ஜமாத்தார்களிடம் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் ரோந்து

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வடக்குதெரு, மணல் மேடு பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் வடக்கு தெரு ஜமாஅத் நிர்வாக சபை தலைவர் ரத்தின முகமது மற்றும் பொதுமக்கள் சார்பில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, தமிழ்நாடு காவல்துறை தலைவர், ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு, கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் கூறியதாவது:- கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், சாயல்குடி போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு பல்வேறு குற்றங்களை குறைத்து வருகின்றனர்.

எச்சரிக்கை

கூடுதலாக கீழக்கரை நகருக்குள் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இரவு 11 மணிக்கு மேல் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்து பெற்றோர்களை காவல் நிலையத்துக்கு வரவைத்து எச்சரிக்கை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்