கனியாமூர் கலவரம்: மாணவியின் தாயாரிடம் விசாரிக்காதது ஏன்..? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி

உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை என மனுதாரர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

Update: 2024-06-27 12:39 GMT

கோப்புப்படம்

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகாவில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த பிளஸ் 2 மாணவி 2022ம் ஆண்டு மரணமடைந்தார். இவர், பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பள்ளி சூறையாடப்பட்டு கலவரம் மூண்டது. இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கனியாமூர் கலவரம் தொடர்பாக மாணவியின் தாயாரிடம் விசாரிக்காதது ஏன்..? என காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

முன்னதாக கனியாமூரில், தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில், மாணவியின் தாய் மற்றும் திராவிட மணி ஆகியோர்தான் காரணம் என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு காவல்துறை பதிலளிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக 519 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 166 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை என மனுதாரர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

பின்னர் நடந்த வழக்கு விசாரணையில், "கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தவில்லை.? நல்ல நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா..? இருவருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் குற்றவாளிகளாக சேர்ப்பீர்களா..?" என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இதற்கு பதிலளித்த காவல்துறை, ஆதாரம் இருந்தால் இருவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்