காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-06-01 08:18 GMT

பிரம்மோற்சவ விழா

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி உற்சவர் வரதர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளிய பிறகு கொடியேற்றம் நடைபெற்றது.

கோவில் பட்டாச்சாரியார்கள் கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றினார்கள். முன்னதாக, கருடன் படம் பொறித்த கொடி, கொடி மரத்தில் கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்துக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. பிறகு காலை உற்சவமான தங்க சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் 4 மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

பிரம்மோற்சவத்தையொட்டி நாள்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பிரமோற்சவத்தின் முக்கிய விழாவாக நாளை(வெள்ளிக்கிழமை) கருட சேவை, அன்று மாலை அனுமந்த வாகனம், 6-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 8-ந்தேதி அனந்தசரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி, அன்று மாலை புண்ணியகோடி விமானம், ஜூன் 9-ந்தேதி மாலை வெட்டிவேர் சப்பரம் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து இருந்தனர்.

தற்காலிக பஸ் நிலையம்

திருவிழாவையொட்டி 2-ந்தேதி நடைபெறும் கருட சேவைக்காட்சியின் போதும், 6-ந்தேதி தேதி நடைபெறும் தேரோட்டத்தன்றும் காஞ்சீபுரத்தில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் காஞ்சீபுரம் மண்டலம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி வெளியூர் பஸ்கள் அந்த இரு நாட்கள் மட்டும் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து புறப்படும்.

சென்னை, பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் பஸ்கள் புதிய ரெயில் நிலையத்திலும், வேலூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பஸ்கள் ஒலிமுகம்மது பேட்டை சந்திப்பிலும் நின்று செல்லும். தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் பஸ்கள் அனைத்தும் பழைய ரெயில் நிலையத்தில் இருந்தும், உத்திரமேரூர், கீழ்ரோடு செல்லும் பஸ்கள் அனைத்தும் ஓரிக்கை மிலிட்டரி சாலை சந்திப்பிலும் நின்று செல்லும். திருச்சி, விழுப்புரம், செய்யாறு செல்லும் பஸ்கள் செவிலிமேடு சந்திப்பிலிருந்து புறப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்