சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்: ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுரை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மநீம தலைவர் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.;
சென்னை,
நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன் தினம் மதியம் சென்னை திரும்பினார். நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் நலமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையின் வாயிலாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், லேசான காய்ச்சல் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். மேலும் வீட்டிலேயே அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.