ஆரம்பித்த துடிப்புக் குறையாமல் ஆறாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் - தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
ஆரம்பித்த துடிப்புக்குறையாமல் ஐந்து ஆண்டுகளை கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
5 தலைமுறைகளை கடந்தும் முன்னணி நடிகராக வலம் வருகிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக் குறிப்பிடத்தக்குந்த வாக்குகளை பெற்றிருந்தாலும், 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி சந்தித்தது. சில தொகுதிகளில் கௌரவமான வாக்குகளை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார்.
இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதன்பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் கமல்ஹாசன் விக்ரம், பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
இதனிடையே ராகுல் காந்தியின்இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்டது, மீண்டும் கமல்ஹாசன் மீது அரசியல் பார்வை திரும்பத் தொடங்கியது. இதனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், விரைவில் திமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரடியாக கமல்ஹாசனிடம் ஆதரவு கோரினார். பின்னர் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த கமல்ஹாசன், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 6-வது ஆண்டை அடி எடுத்து வைக்கும் இந்தநாளில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,
ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.