கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - டி.ஜெயக்குமார்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்திட வேண்டும் என்று தமிழக அரசை டி.ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-07-18 15:10 GMT

சென்னை,

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த மாணவியின் குடும்பத்தினர் சரியான, நேர்மையான உடற்கூறு ஆய்வு நடவடிக்கை மற்றும் உள்ளூர் போலீஸ் துறை மீதான சந்தேகத்தினால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை ஆகிய கோரிக்கைகளை வைத்தனர். மேலும் தங்களது மகளின் இறப்புக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினர்.

உள்கட்சி பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி குழம்பி போய் இருப்பதாக எ.வ.வேலு கூறி இருக்கிறார். எந்த நிலையிலும் எங்களுக்கு குழம்பும் பழக்கமோ, அடுத்தவர்களை குழப்பும் பழக்கமோ இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்பட வேண்டும். மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற தூய எண்ணம் கொண்ட பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.

முதல்-அமைச்சர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க முனைப்பு காட்ட வேண்டும். தற்போது இந்த வழக்கு தமிழக போலீஸ்துறையின் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் விசாரணையை ஐகோர்ட்டு தன்னுடைய நேரடி கண்காணிப்பில் எடுத்துக் கொள்ளும் என்று கூறி உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.    

Tags:    

மேலும் செய்திகள்