கள்ளழகர் திருவிழா: தண்ணீர் பீய்ச்சியடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியரின் உத்தரவுக்கு தடை

கள்ளழகர் விழாவில் தண்ணீர் பீய்ச்சியடிக்க மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாடு விதித்து இருந்தார்.

Update: 2024-04-18 09:20 GMT

மதுரை,

ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மதுரையை சேர்ந்த ரஞ்சித் குமார் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது;

அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும். பாரம்பரிய முறையில் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனால், முறையாக முன் அனுமதி பெற்றவர்கள் மட்டும், பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கள்ளழகரின் சிலை, ஆபரணங்கள், குருக்கள் மீது தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சுவதை தடுக்க வேண்டும். ஆனால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதை எவ்வாறு தடுப்பது? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, கள்ளழகரின் ஆசி பெரும் வகையிலேயே தண்ணீர் அனைவரின் மீதும் பீய்ச்சப்படுகிறது. மாவட்ட கலெக்டர் உத்தரவால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என வாதிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மாவட்ட கலெக்டரின் இந்த உத்தரவால், தற்போது வரை 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ளனர். இது பாரம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு, பக்தர்களின் மனதையும் புண்படுத்தும் என கருதுவதால் மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மதுரை மாவட்ட கலெக்டர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்தார்? சட்ட அலுவலர் அல்லது கோவில் நிர்வாகத்திடம் ஆலோசிக்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையில் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்