சுந்தர மகாகாளியம்மன் கோவிலில் காளி திருநடன திருவிழா

சுந்தர மகாகாளியம்மன் கோவிலில் காளி திருநடன திருவிழா

Update: 2023-03-31 19:46 GMT

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதி பகுதியில் சுந்தர மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் காளி திரு நடன திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி மாத காளி திருநடன திருவிழா கடந்த 23-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பச்சைகாளி, பவளக்காளி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை காவிரி ஆற்றிலிருந்து சக்திவேல் சக்தி கரகம், அக்னிசட்டி, பால்குடம், சக்திவேல் புறப்பட்டு நகரின் முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது. பின்னர் சுந்தரமகா காளியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று மதியம் நடந்த சிறப்பு வசந்த பாலாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடும், படுகளம் காட்சியுடன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) சக்தி கரகம் அக்னி கொப்பரையுடன் பச்சைக்காளி, பவளக்காளி வீதி உலா நிகழ்ச்சியும், 4-ந் தேதி பச்சைக்காளி பவளக்காளி கோவிலுக்கு திரும்புதல் நிகழ்ச்சியும், 5-ந்தேதி அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்