கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு - கடந்த 2 வாரத்தில் 10 மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு தொடர்பாகா கடந்த 2 வாரத்தில் 10 மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை,
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் கொண்ட ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். பாரம்பரியம் மிக்க இந்த கலாஷேத்ரா கவின் கல்லூரியில் நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளை சேர்ந்த மாணவிகளும் கலைகளை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்த நிலையில், கலாஷேத்ரா மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மாணவிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தற்போது இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
இந்நிலையில், பாலியல் புகார் வழக்கு தொடர்பாக சென்னை அடையாறு மகளிர் காவல்துறையில் காடந்த 2 வாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கலாஷேத்ரா மாணவிகள் காவல்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். நாங்கள் எந்த விதமான பாதிப்புகளும் உள்ளாகவில்லை என்றும் எங்களது ஆசிரியர்கள் மீது அன்பும், மரியாதையும் உள்ளது என மாணவிகள் கூறியதாக தகவலகள் வெளியாகியுள்ளன. சில மாணவிகள் எங்களுக்கும், இந்த புகாருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர்.
வழக்கு தொடர்பாக 162 மாணவிகளிடம் விசாரணை நடத்துமாறு மாநில மகளிர் ஆணையம் காவல்துறைக்கு பரிந்துரை செய்து இருந்தது. மாநில மகளிர் ஆணைய பரிந்துரையின் பேரில் 162 மாணவிகளுக்கு அடையாறு காவல்துறை சம்மன் அனுப்பியது.