கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம்: விவசாயிகள் தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்து பயன்பெறலாம் - வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்து பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-09 07:49 GMT

திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி என்கிற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களில் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவை அடைந்திட வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளில் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும், வேளாண்மையில் மகசூல் பெருக்கம் அடைந்திடவும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயல்படுத்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது.

முதல்-அமைச்சரின் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக தொகுப்பு தரிசு நிலங்களில் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டு சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்றப்படுகிறது. மேலும் தொகுப்பு தரிசு நிலங்களில் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்தி மண் மற்றும் நீரின் தன்மைக்கேற்ற குறைந்த நீர் தேவை உடைய பலன் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்திட திட்டத்தில் வழிவகை உள்ளது.

இந்த திட்டம் நடப்பு ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் 141 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நில தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு தொலைபேசியில் உழவன் செயலியில் தாங்களாகவே பதிவு செய்திட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அவ்வாறு பதிவேற்றம் செய்த விவரங்களை துறை அலுவலர்கள் தொகுப்பு தரிசு நிலத்தினை நேரில் பார்வையிட்டு சரிபார்த்த பின்பு நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொண்டு ஆழ்துளை கிணறு அல்லது குழாய் கிணறு அமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

எனவே, இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தரிசு நிலமுடைய விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் இத்துறையின் நலத்திட்டங்களில் பயனடைய விவசாயிகள்

https://www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/scheme-register என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து இணைந்திடலாம். கூடுதல் தகவலுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்படலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்