2½ லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை- நெல்லை கலெக்டர்
நெல்லை மாவட்டத்தில் 2½ லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும், குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.இந்த மாநாட்டில் கலந்துகொண்டு நெல்லைக்கு திரும்பிய கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-
தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். நெல்லை மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.370 கோடி மதிப்பில், நெல்லை மேற்கு புறவழிச்சாலைத்திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. பணிகளை விரைவாக மேற்கொள்ளும் பொருட்டு 3 தொகுப்புகளாக பிரித்து பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 398 மகளிருக்கு தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605.75 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் சுமார் 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகர பகுதிகளில் கழிவுநீர் மேலாண்மைக்காக பாதாள சாக்கடை திட்டம் சுமார் ரூ.660 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் ரூ.8 கோடி செலவில் பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, முக்கூடல், பாப்பாகுடி ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை கட்டிடங்கள் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.4 கோடியே 70 லட்சம் செலவில் அரசு சட்டக் கல்லூரியில் வகுப்பறைகள், ஆசிரியர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நெல்லையில் ரூ.33 கோடியே 2 லட்சம் மதிப்பில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.72 கோடியே 10 லட்சம் மதிப்பில் இதயம், நரம்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை கட்டிடம் கட்டப்படுகிறது. நெல்லை மாவட்டத்திற்கு தேவையான சாலை, பாலம் வசதிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து சரி செய்வதற்கான திட்டங்கள், தாமிரபரணி நதியை சுத்தப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆகியவை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.