பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்

கடலூர் மாவட்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது.

Update: 2023-09-10 18:57 GMT

காதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, மங்கலம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய 3-வது மகன் நமச்சிவாயம் (வயது 24). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கோவில் ஸ்தபதியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நமச்சிவாயம் தனது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வந்த மருதைமுத்துவின் மகள் அனிதாவை (23) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

என்ஜினீயரிங் படித்துள்ள அனிதாவும், நமச்சிவாயத்தை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அனிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் நமச்சிவாயமும், அனிதாவும் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் நேற்று காலை 7 மணியளவில் பெரம்பலூருக்கு வந்து சமூக செயல்பாட்டாளர் சத்யபிரபு உள்ளிட்ட அவரது நண்பர்கள் முன்னிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தலில் உள்ள கரடி முனீஸ்வரர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து தங்களது உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தஞ்சமடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் நமச்சிவாயம், அனிதாவின் பெற்றோர்களை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை.

காதல் கணவருடன் சென்றார்

ஏற்கனவே அனிதாவின் பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தனர். அதன்பேரில் தகவலறிந்த அங்குள்ள போலீசார் பெரம்பலூர் வந்து அனிதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அனிதா என்னை யாரும் கடத்தவில்லை என்றும், நான் காதலித்து விருப்பத்துடன் தான் நமச்சிவாயத்தை திருமணம் செய்து கொண்டதாகவும், நான் எனது கணவருடன் செல்வதாகவும் விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நமச்சிவாயம் வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருவதால் தனது காதல் மனைவியை அங்கு அழைத்து சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்