கஞ்சா கடத்த பயன்படுத்திய கார் உரிமையாளர் விடுவிப்பு: துணை போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை கோர்ட்டு உத்தரவு

கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய போலீஸ் துணை சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-05-30 21:06 GMT


கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய போலீஸ் துணை சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

காரில் கஞ்சா கடத்தல்

கடந்த 2021-ம் ஆண்டில் மதுரை வைகை வடகரை பகுதியில் செல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் மரத்தூள்கள் மூடை மூடையாக வைக்கப்பட்டு இருந்தன.

அந்த மூடைகளை சோதனை செய்த போது அவற்றுக்குள் கஞ்சா மூடையும் இருந்தன. இதையடுத்து காரில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர். பின்னர் காரில் இருந்த 206 கிலோ மரத்தூள், 74 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

இது தொடர்பாக மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 29), வில்லாபுரத்தைச் சேர்ந்த ஷாஜி அலி(36), கார் உரிமையாளர் விஜயகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது கஞ்சா கடத்தல் சம்பவம் என்பதால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

10 ஆண்டு சிறை

அவர்கள் இந்த கஞ்சா கடத்தல் சம்பவம் குறித்து விசாரித்து, மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அரசு தரப்பில் வக்கீல் கே.விஜயபாண்டியன் ஆஜரானார்.

விசாரணை முடிவில், சரவணகுமார், ஷாஜி அலி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் விஜயகுமார் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு சொந்தமான கார் மூலமாக கஞ்சா கடத்தப்பட்டதை முறையாக நிரூபிக்காத போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்