கலைத்துறையில் தோல்விகளை வென்றது போல 'அரசியலிலும் தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி அடைவேன்' - கமல்ஹாசன்
கலைத்துறையில் தோல்விகளை வென்றதுபோல அரசியலிலும் தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி அடைவேன் என கமல்ஹாசன் உறுதிபட தெரிவித்து உள்ளார்.;
சிறந்த அரசியல் வியூகம்
மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
16-11-2022 அன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும், தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அந்தவகையில், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களையும் சந்தித்து விட்ட நம்மால், இந்தமுறை சிறந்த அரசியல் வியூகம் வகுத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும், தேர்தல் வியூகம் குறித்து இன்னும் விரிவாக கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
சமூக கடமை
கடந்த மாதங்களில் செய்யப்பட்ட களப்பணிகள் மற்றும் மாவட்ட கட்டமைப்பு நிலவரம் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்த தலைவர், கட்சிக்கான பிரத்யேக பிரசார வாகனம் கூடிய விரைவில் ஒவ்வொரு தொகுதிக்கும் வந்து சேரும் என்றும், ஒட்டு மொத்த தமிழகத்தையும் சீரமைக்கும் மாபெரும் மக்களின் பணியே நம்முடைய பணியும் கூட. அதையே சமூக கடமையாகவும் கருதுகிறேன் என்று கூறினார்.
மேலும், மாவட்ட செயலாளர்களாகிய நீங்களும் இதை மனதில் வைத்துக்கொண்டு பணியினை செவ்வனே செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கலைத்துறையில் தடைகள், தோல்விகள் என அனைத்தையும் எதிர்கொண்டு வென்றது போல, அரசியல் தடைகளையும், தோல்விகளையும் தகர்த்தெறிந்து வெற்றி அடைவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்தவும், களப்பணிகளை அதிகப்படுத்தவும், தமிழக அரசியல் வரலாறு, களப்பணி வியூகங்கள், சட்ட அடிப்படை போன்ற பல்வேறு விதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.