குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவு பண்டங்கள்-டாக்டர், தாய்மார்கள் கருத்து

Update: 2023-01-16 18:45 GMT

நமது வீட்டில் சமைக்கின்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்த காலம் உண்டு. சாதம், இட்லி, தோசை மட்டுமே பிரதான உணவுகளாக இருந்தன. சோளம், உளுந்து, பயிறு, கடலை, அரிசி ஏதோ ஒன்றை வறுத்து தருவார்கள். மிஞ்சிப் போனால் முறுக்கு, சீடை, கடலை மிட்டாய் போன்ற நொறுக்குத் தீனிகளை கடைகளில் வாங்கி சாப்பிடுவோம். அவை கலப்படம் இல்லாமலும், மண் சார்ந்த உணவுகளாகவும், சுவை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் குறைவில்லாமல் இருந்தன. ஓட்டல்களுக்கு எப்போதோ ஒருநாள் தவிர்க்க முடியாமல் போவது உண்டு.

இப்போது நிலைமை அப்படி அல்ல. ஓட்டல்களுக்கு போவது ஒரு நாகரிகமான, கவுரவமான நடைமுறையாகி விட்டது.

மாறிவரும் உணவு பழக்கம்

பெரும்பாலான வீடுகளில் சமையல் அறைகள் ஓட்டல்களுக்கு போய்விட்டன. வீடுகள் தங்கும் ஓட்டல்களாக மாறிவருகின்றன. இதனால் பல்வேறு ஒவ்வாமைகள், பிரச்சினைகள் உடல்ரீதியாக நாம் சந்திக்க நேர்கின்றன.

குழந்தைகளும் இயற்கையான உணவை விட்டு செயற்கையாக செய்யப்படும் கவர்ச்சியான உணவு வகைகளையே விரும்புகிறார்கள். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், சாக்லெட், லேஸ் போன்ற தின்பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பிசா, பர்கர் போன்ற ரெடிமேடு உணவு வகைகளுக்கும் அடிமையாகி வருகிறார்கள். நாகரீகம் என்ற பெயரால் மாறிவரும் இந்த உணவுப் பழக்கங்களால் ஏற்படுகின்ற சாதக, பாதங்கள் குறித்து டாக்டர் மற்றும் தாய்மார்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

உடல் நலனுக்கு தீங்கு

அரசு டாக்டர் முனுசாமி:-

தென்னிந்தியாவில் வசிக்கும் மக்களின் பாரம்பரிய உணவு பழக்கத்தில் இடம்பெறாத துரித உணவு வகைகள், தற்போது இந்த பகுதியில் அதிக அளவில் உண்ணப்படும் உணவுகளாக மாறி வருகின்றன. புரதச்சத்து, கனிமச்சத்து, வைட்டமின் சத்து ஆகியவை துரித உணவுகளில் குறைந்த அளவில் உள்ளன. துரித உணவுகளில் முக்கியமாக இருப்பது உப்பு மற்றும் கொழுப்பு சத்து. குறிப்பாக நமது சீதோசண நிலைக்கு முழுமையாக பொருந்தாத உணவு வகைகள் இப்போது அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளாக உள்ளன. குறிப்பாக ஜங்க் புட், பாஸ்ட் புட் ஆகியவை குழந்தைகள், சிறுவர்-சிறுமிகளின் விருப்ப உணவாக மாறி வருவது அவர்களுடைய உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பல்வேறு வகையான சாக்லேட்டுகள் வித்தியாசமான சுவைகளை வழங்கும் நொறுக்கு தீனிகள் குழந்தைகளை மிகவும் கவர்கின்றன. ஆனால் அந்த உணவுகளில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், சுவையூட்டிகள் குழந்தைகளின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவை. புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புதுவிதமான நோய்கள் வருவதற்கு இவை மூல காரணமாக உள்ளன. எனவே இத்தகைய உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதை பெற்றோர்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நமது சுற்றுப்புற சூழலுக்கு உகந்த புரதச்சத்து கொண்ட நிலக்கடலை, பருப்பு வகைகள், சிறுதானிய உணவு வகைகளை குழந்தைகளுக்கு வழங்கி அவர்களுடைய எதிர்கால ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும்.

பெற்றோருக்கு பொறுப்பு உள்ளது

அழகாகவுண்டனூரை சேர்ந்த குடும்பத் தலைவி சுதா:-

சிறு வயதில் குழந்தைகளுக்கு சாக்லேட், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகள் மீது அதிக விருப்பம் ஏற்படுவது இயற்கையானது. ஆனால் இதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்குதான் உள்ளது. ஜங்க் உணவுகள் மற்றும் துரித உணவுகளை விரும்பி சாப்பிடும் குழந்தைகளிடம் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூற வேண்டும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அதனை புரிந்து கொள்வார்கள். எங்கள் வீட்டில் குழந்தைகளின் உணவு பட்டியலில் ஜங்க் உணவுகள் மற்றும் துரித உணவுகள் இடம் பெறுவதை படிப்படியாக தவிர்த்து வருகிறோம்.

சத்துள்ள பாரம்பரிய உணவுகளை படிப்படியாக அவர்களுடைய உணவு பழக்கத்தில் இடம் பெற செய்கிறோம். நகர்ப்புறங்களில் இப்போது சிறுதானிய உணவுகள் குறித்து சிறுவர்-சிறுமிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த உணவுகள் எளிதாக கிடைக்கும் கிராமப்புறங்களில் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நல்ல மாற்றம்

கடமடையை சேர்ந்த இல்லத்தரசி மாரியம்மாள்:-

நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள கடைகளிலும் சிறுவர்-சிறுமிகளை கவரும் வகையில் பல்வேறு புதிய தின்பண்டங்கள் விற்பனைக்கு வந்து விட்டன. இவை குழந்தைகளை கவரும் வகையில் பேக்கிங் செய்யப்பட்டிருப்பதால் அவற்றை கண்டிப்பாக வாங்கி தர வேண்டும் அன்று சிறுவர், சிறுமிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இத்தகைய தின்பண்டங்கள், உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறுவர்-சிறுமிகளுக்கு தெரியாது. இது தொடர்பாக பெற்றோரும், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களும் சிறுவர்-சிறுமிகளுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பலவித சாக்லேட், சிப்ஸ், நூடுல்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களுக்கு பதிலாக கடலை உருண்டை, எள்ளு உருண்டை, முறுக்கு உள்ளிட்ட சத்தான தின்பண்டங்களை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ச்சியாக அவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் படிப்படியாக அவர்களுடைய மனதில் சத்தான உணவுகள் குறித்து பதிய வைக்க முடியும். இதன் மூலம் அவர்களுடைய உணவு பழக்க வழக்கத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

பாடத்திட்டத்தில்...

கல்கூடஅள்ளியை சேர்ந்த குடும்பத்தலைவி முத்துராணி:-

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட நொறுக்கு தீனிகளில் எண்ணெய் அதிக அளவில் இருக்காது. ஆனால் இப்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் துரித உணவுகளில் எண்ணெய், கொழுப்பு, உப்பு, இனிப்பு ஆகியவை அதிகமாக உள்ளன. இத்தகைய நொறுக்கு தீனிகளை சிறுவர்-சிறுமிகளின் கண்களில் அதிகம் படாதபடி பார்த்து கொள்ள வேண்டும். இத்தகைய நொறுக்கு தீனிகளை அதிகமாக சாப்பிடும் போது உடலில் உப்பு சத்து, கொழுப்பு சத்து, சர்க்கரை சத்து அதிகமாக சேர்ந்து விடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு உடல் பருமன், சிறுவயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஆகியவை ஏற்படுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இதற்கு தீர்வு காண பள்ளிகள் அருகே துரித உணவுகள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நொறுக்கு தீனிகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும். தொடக்க பள்ளி பாடத்திட்டத்தில் சத்தான உணவு பழக்கம், துரித உணவுகளை தவிர்த்தல் குறித்து இடம்பெற செய்து ஆசிரியர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்