இளநிலை உதவியாளர் பணி: வரும் 25, 26 தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு!
இளநிலை உதவியாளர் பணிக்கு வரும் 25, 26 தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
குரூப்-4 ல் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 673 இளநிலை உதவியாளர் பட்டியல், பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது. பணியாளர்களுக்குக் கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு கலந்தாய்வு நடைபெற உள்ளதால், பணிநாடுநர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள நாளில் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்துடன் பணியாளர்களின் பெயர் விவரப் பட்டியல் இணைத்து அனுப்பப்படுகிறது. நியமன அலுவலர்களான முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிருவாக வரம்புக்குட்பட்ட பணிநாடுநரின் விவரங்களைக் கண்டறிந்து பட்டியல் தயார் செய்து, அப்பணியாளர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ள விவரங்களைக் குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும். தங்கள் ஆளுகைக்குட்பட்ட பணியாளர்கள் அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும் 27.09.2023 அன்று பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளதால் அந்நாள் வரை பணிநாடுநர்கள் தங்கள் சொந்த செலவில் தங்கும் வசதி மற்றும் இதர வசதி ஏற்பாடு செய்து கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட வேண்டும். மேற்காணும் விவரங்களை அனைத்து பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதையும் மற்றும் எந்த ஒரு பணியாளர்களும் விடுபடவில்லை என்பதையும் உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.