திருப்பூரில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் 3 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அரசு பஸ்கள் ஜப்தி
திருப்பூர் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 50). டெய்லர். இவர் கடந்த 17-4-2014 அன்று திருச்சியில் இருந்து கரூர் நோக்கி அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது விபத்து ஏற்பட்டு சர்புதீன் காயமடைந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்பிழைத்தார். அவர் விபத்து இழப்பீடு கேட்டு திருப்பூர் மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்குதொடுத்தார். அவருக்கு ரூ.14 லட்சத்து 7 ஆயிரத்து 43-ஐ அரசு போக்குவரத்து கழகம் வழங்க கடந்த 30-7-2021 அன்று தீர்ப்பானது. இதுவரை இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினார்கள்.
திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அமீதா (வயது 52) என்பவர் கடந்த 24-3-2018 அன்று அவினாசி அருகே அணைப்புதூர் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது அரசு பஸ் மோதி இறந்தார். அவருடைய கணவர் விபத்து நஷ்ட ஈடு கேட்டு திருப்பூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். ரூ.12 லட்சத்து 41 ஆயிரத்து 798 இழப்பீடு வழங்க கடந்த 6-8-2021 அன்று தீர்ப்பானது. ஆனால் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. இந்தநிலையில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருப்பூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
விபத்து இழப்பீடுஅரசு பஸ்கள் ஜப்தி
தேனியை சேர்ந்த கணபதிராமன் (60) கடந்த 8-9-2018 அன்று இருசக்கர வாகனத்தில் அருள்புரம் அருகே சென்றபோது அரசு பஸ் மோதி இறந்தார். அவருக்கு விபத்து இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் திருப்பூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். அவருக்கு ரூ.6 லட்சத்து 86 ஆயிரத்து 56 இழப்பீடு வழங்க கடந்த 6-8-2021 அன்று தீர்ப்பானது.
இதுவரை இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி அரசு பஸ்சை நேற்று கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். மேற்கண்ட 3 வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் வக்கீல் ஈ.என்.கந்தசாமி ஆஜராகி வாதாடினார்.