கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி:சாலையில் கவிழ்ந்த பொக்லைன் எந்திரம் :போக்குவரத்து பாதிப்பு

கம்பம் அருகே சாலையில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-17 18:45 GMT

கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் ராட்சத குழாய்கள் அமைத்து குடிநீர் கொண்டு செல்வதற்கான கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள் மதுரை நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலையோரம் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழாய்களை பதிக்கும் பணி நடக்கிறது. அதன்படி கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் புறவழிச்சாலையையொட்டி குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக பொக்லைன், கிரேன் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி, நேற்று உத்தமபாளையம்-சின்னமனூர் செல்லும் சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று மதியம் குழாய் பதிக்கும் பணியின்போது பொக்லைன் எந்திரம் திடீரென ஆபரேட்டரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனை மீட்பதற்காக கிரேன் எந்திரம் கொண்டு வரப்பட்டது. அப்போது சாலையின் குறுக்கே எந்திரத்தை நிறுத்தி மீட்பு பணி நடந்தது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான வாகனங்கள் வந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து பொக்லைன் எந்திரத்தை கிரேன் மூலம் அகற்றினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்