கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை

கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-25 03:17 GMT

ராமநாதபுரம்,

ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மீனவ பெண்கள் அப்பகுதியில் கிடைக்கும் கடல் பாசியை சேகரித்து அதை விற்று வருவதை வழக்கமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற 45 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் கடல்பாசியை சேகரிக்க சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் சந்திராவை கேலி செய்தாக கூறப்படுகிறது. அத்துடன் இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கொலையை மறைக்கும் நோக்கில் உடலை தீவைத்து எரிந்துள்ளனர்.

சந்திரா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சந்தேகத்தின் அடிப்படையில் 6 வடமாநிலத்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இருப்பினும் ஆத்திரத்தில் கைது செய்யப்பட்ட ஆறு போரையும் அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதை தொடர்ந்து அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

அத்துடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயிரிழந்த சந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணையின் முடிவில் தான் 6 வட மாநிலத்தவர்கள் குற்றவாளிகளா அல்லது நிரபராதிகளா என்று தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்