தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 1,201 பேருக்கு பணி நியமன ஆணை-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

Update: 2023-01-22 18:45 GMT

தர்மபுரி:

நல்லம்பள்ளியில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,201 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக-நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் சென்னை, பெங்களூரு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 239 முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் 15 திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி.ஐ.,டிப்ளமோ, டிகிரி, என்ஜினீயரிங் படித்த 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் 52 மாற்றுத்திறனாளிகள் உள்பட 4 ஆயிரத்து 644 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 8 மாற்றுத்திறனாளிகள் உள்பட 1,201 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

பணி நியமன ஆணை

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன், விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் லதா வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,201 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, கல்லூரி நிர்வாக அலுவலர் விக்ரமன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்