காட்டுமன்னார்கோவிலில் மர்மநபர்கள் கைவரிசை: வீடு புகுந்து மாமியார், மருமகளிடம் தாலி செயின் பறிப்பு மேலும் ஒரு வீட்டில் நகையை திருடி சென்றனர்

காட்டுமன்னார்கோவிலில் வீடு புகுந்து மாமியார், மருமகளிடம் தாலி செயினையும், மேலும் ஒரு வீட்டில் நகையையும் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

Update: 2022-06-25 16:55 GMT


காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 58). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கு தூங்கிக்கொண்டிருந்த விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயின், அவரது மருமகளான சுபா(35) கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலி செயினையும் பறித்தனர்.

தப்பி ஓட்டம்

மேலும் மற்றொரு மருமகளான மகேஸ்வரி (34) கழுத்தில் கிடந்த 4 பவுன்தாலி செயினை மர்மநபர்கள் பறிக்க முயன்ற போது, அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு, விஜயலட்சுமியும், சுபாவும் எழுந்து கூச்சலிட்டனர். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து 6 பவுன் செயினுடன் தப்பி சென்றுவிட்டனர். அதன்பின்னர் தான், விஜயலட்சுமி, சுபாகழுத்தில் கிடந்த நகை பறிபோய் இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

மற்றொரு வீட்டில் திருட்டு

இதேபோல், அந்த பகுதியில் உள்ள பாலமுருகன் என்பவரது வீட்டில் இருந்த 2 கிராம் தங்க மோதிரத்தையும் திருடி சென்றுவிட்டனர். அதோடு வீட்டு பீரோவில் இருந்த பத்திரங்கள் அடங்கிய பையை எடுத்து வெளியே வீசி சென்று இருந்தனர். இதுபற்றி அறிந்த காட்டுமன்னார் கோவில் போலீசார் விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி, சிறிது தூரம் ஓடிச்சென்று மீண்டும் திரும்பி வந்துவிட்டது.

உடலில் மை பூசி வந்தனர்

இதுபற்றி செயினை பறிகொடுத்த விஜயலட்சுமி கூறுகையில், திருட்டில் ஈடுபட்டவர்கள், தங்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக, உடலில் கருப்பு நிறத்தில் மையை பூசி வந்திருந்தனர் என்று தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்