சேலத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

சேலத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-04 22:28 GMT

நகை, பணம் திருட்டு

சேலம் அரிசிபாளையம் சையத் கபூர் தெருவை சேர்ந்தவர் பரணி என்கிற பழனி (வயது 45). இவர், தம்மண்ணன் ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை இவரும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் கடைக்கு சென்றுள்ளனர். அதன்பிறகு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பழனி உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும், பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் பழனி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவங்கள் ஏதும் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அரிசிபாளையம் நாராயணசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (45). வெள்ளி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ.6 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் பள்ளப்பட்டியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டுபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்