ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு
விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
விழுப்புரம் இ.எஸ். கார்டன் நெய்தல் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 63). வேளாண் துறையில் ஓய்வுபெற்ற ஊழியரான இவர் கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை பெருங்களத்தூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை விழுப்புரம் வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1 பவுன் நகை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.