காரிமங்கலம் அருகே துணிகரம்:காரை வழிமறித்து 5 கிலோ தங்க நகைகள் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Update: 2023-09-28 19:00 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

5 கிலோ தங்க நகைகள்

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 40). இவர் தனது நண்பர் விமல் என்பவருடன் சேர்ந்து கோவையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நகைகள் வாங்க கடை ஊழியர்கள் சுரேஷ்குமார், விஜயகுமார், அசோக்குமார் ஆகியோர் காரில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு சென்றனர்.

காரை டிரைவர் ஜெய்சன் என்பவர் ஓட்டினார். பெங்களூருவில் அவின்யா சாலையில் உள்ள ஒரு நகைக்கடையில் 5 கிலோ தங்க நகைகளை வாங்கினர். இதன் மதிப்பு ரூ.75 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.

கார் வழிமறிப்பு

இந்த நகையை காரில் உள்ள லாக்கரில் வைத்து எடுத்து கொண்டு 4 பேரும் கோவைக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 2 மணி அளவில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி ஆற்றுப்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது காரின் முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென நகைக்கடைக்காரர்கள் வந்த காரை வழிமறித்து நின்றது. பின்னர் அந்த காரின் பின்னால் மற்றொரு காரும் வந்து நின்றது.

நகைகள் கொள்ளை

இந்த 2 கார்களில் இருந்து இறங்கிய 4 பேர் நகைகள் வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை இரும்பு ஸ்பேனரால் உடைத்தனர். இதனைத்தொடர்ந்து காரில் இருந்த 4 பேரையும் மிரட்டி அவர்களை வெளியே இழுத்து தாக்கினர். பின்னர் காரில் வைக்கப்பட்டிருந்த 5 கிலோ நகைகளுடன் காரையும் அங்கிருந்து ஓட்டி சென்றனர். மேலும் அவர்களுடன் வந்தவர்கள் மற்ற 2 கார்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த 4 பேரும் இதுபற்றி நகைக்கடை உரிமையாளர் பிரசன்னாவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் கார் மூலம் கோவையில் இருந்து நேற்று காரிமங்கலத்திற்கு வந்தார். நடந்த சம்பவம் குறித்து கடை ஊழியர்களிடம் கேட்டறிந்த அவர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காருடன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு

காரிமங்கலம் அருகே 5 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனை நடத்தினார். அங்கு இரும்பு ராடு, ஒரு செல்போன் ஆகியவை போலீசாரிடம் சிக்கியது.

இந்த நிலையில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி நேற்று நகை கொள்ளை சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த தடயங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி கூறினார்.

சுங்கச்சாவடிகளில் சோதனை

காரிமங்கலம் அருகே நகைக்கடைக்கு எடுத்து செல்லப்பட்ட 5 கிலோ தங்க நகைகள் காருடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தொப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதி சுங்கச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதேபோல் தனிப்படை அமைக்கப்பட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்