ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதில் சிக்கல்: '10-ம் வகுப்பு மதிப்பெண் கேட்பதால் எதிர்காலம் பாதிக்கப்படும்' - மாணவர்கள் வேதனை
ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு மதிப்பெண் கேட்பதால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கொரோனா பேட்ஜ் மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.;
கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் தமிழகத்தில் கடந்த 2020-21ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால் அனைவரும் தேர்ச்சி என்று மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பிளஸ்-1 வகுப்புகளில் சேர்ந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர் தற்போது பிளஸ்-2 படித்து வரும் இந்த 'கொரோனா பேட்ஜ்' மாணவர்கள் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழக மாணவ-மாணவிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது
இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தாம்பரத்தை சேர்ந்த மாணவர் தில்சான் கூறுகையில், 'நாங்கள் 2021 'கொரோனா பேட்ஜ்' பொதுத்தேர்வு எழுத முடியவில்லை. திருப்புதல் தேர்வு, அரையாண்டு தேர்வு எழுதினோம். அந்த 2 தேர்வுகளையும் அரசாங்கம்தான் நடத்தியது.
கொரோனா பரவலால் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் தேர்வில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டோம். ஆனால் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. தற்போது ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தின்போது மதிப்பெண்கள் கேட்கிறார்கள். இதனால் எங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளோம் அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
மாணவி கமலா சரஸ்வதி கூறுகையில், 'ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது 10-ம் வகுப்பு மதிப்பெண் கேட்பதால் என்னால் விண்ணப்பிக்க முடியவில்லை. அடுத்த மாதம் தேர்வு நடைபெற உள்ள நிலையில் பல மாதங்களாக இந்த தேர்விற்கு தயாராகி வந்திருக்கிறேன். தேர்வு எழுத முடியுமா என்ற பயம் உள்ளது' என்றார்
மாணவி விஜயலட்சுமி கூறுகையில், 'ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தேர்ச்சி என்பதை மட்டும் கேட்கும் வகையில் தேர்வு முகமை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
2020-21-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இதில் பல லட்சம் மாணவர்கள் தற்போது பிளஸ்-2 படித்து வருகின்றனர்.
பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் ஆன்லைன் விண்ணப்பங்களில் உள்ள மதிப்பெண் கேட்கும் பகுதியை நீக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.