ஜெயங்கொண்டம் ஸ்டேட் வங்கியில் தீ விபத்து: வாடிக்கையாளர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் தப்பியது

தீ விபத்துக்குள்ளான ஜெயங்கொண்டம் ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் தப்பியது.

Update: 2023-04-29 19:28 GMT

வங்கியில் தீ விபத்து

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வங்கியில் இருந்த சில கணினிகள், குளிரூட்டிகள், மர சாமான்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் தங்களின் நகை, பணம், பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்திருக்குமோ? என்ற அச்சத்தில் வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தனர். அவர்களுக்கு வங்கி அதிகாரிகள் பக்குவமாக பதில் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

மாற்று கட்டிடத்தில்...

இதையடுத்து, நேற்று காலை வாடிக்கையாளரின் சேவை பாதிக்கப்படாத வண்ணம் ஸ்டேட் வங்கி கிளை அருகாமையில் ஓர் தற்காலிக கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து வங்கி செயல்பட தொடங்கியது. இதில் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பர்னிச்சர் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வாங்கப்பட்டு வங்கி ஊழியர்களின் லேப்-டாப்களை பயன்படுத்தி வங்கி செயல்பட தொடங்கியது. இதில் சேமிப்பு கணக்கு வரவு- செலவுகள் மட்டும் கையாளப்பட்டது. காசோலை மாற்றுதல், குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் பெறுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு அருகே உள்ள உதயநத்தம், மீன்சுருட்டி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு செல்லுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இன்னும் சில நாட்களில் வங்கி முழுமையாக செயல்பட தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வங்கி அதிகாரிகள், போலீசார் ஒலிபெருக்கி மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் (லாக்கர்) வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், தற்பொழுது வங்கி சேவை மாற்று கட்டிடத்தில் தொடங்கி செயல்படுவதாகவும், இன்னும் ஓரிரு நாளில் வங்கி சேவை முழுமையாக செயல்படும் எனவும் தெரிவித்தனர்.

நகை-பணம் பாதுகாப்பாக உள்ளது

இதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி விழுப்புரத்தை சேர்ந்த மண்டல மேலாளர் சேதுராமன் தலைமையிலான குழுவினர் வங்கியை பார்வையிட்டனர். மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று திருச்சி மத்திய மண்டல அறிவியல் நிபுணர் குமரவேல் ஆய்வு செய்தார். மேலும் வங்கி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள், பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் பீதி அடைய தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது வாடிக்கையாளர்கள் சிலர் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ள நகை, முக்கிய ஆவணங்களை பார்க்க வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்