ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆஸ்பத்திரியில் அனுமதி...!

தீபாவை அன்று போல இன்றும் நேசிக்கிறேன். அவர் மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன் என கணவர் மாதவன் கூறி உள்ளார்.;

Update:2022-08-30 13:51 IST

சென்னை:

ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அவர் அரசியலில் நுழைந்து திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் தினமும் தொண்டர்களை சந்தித்து வந்தார். இதனால் அவரது வீட்டில் தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

இதையடுத்து தீபா புதிய அமைப்பை தொடங்கி அதற்கு தொண்டர்களை சேர்த்து வந்தார். அவருக்கு உறுதுணையாக கணவர் மாதவன் இருந்தார். அதன் பிறகு தீபாவுக்கும், மாதவனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அரசியலிலும் அவருக்கு மவுசு குறையத்தொடங்கியது. இதையடுத்து அவர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார்.

பின்னர் கணவர் மாதவனுடன் சேர்ந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடும் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக்குக்கு கிடைத்தது.

தி.நகர் வீட்டில் வசித்து வந்தாலும் அவ்வப்போது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் ஜெ.தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜெ.தீபா திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் கூறியதாவது:-

எனது மனைவி தீபா என்னைப்பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை இன்று வரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன்.

அவர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது. சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்ப தகராறு தான். அவர் ஏதோ கோபத்தில் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

தீபாவை அன்று போல இன்றும் நேசிக்கிறேன். அவர் மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன். தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. இதுவும் கடந்து போகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தீபா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்