'பக்ரீத் பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும்' - தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை

பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-06-27 19:04 GMT

சென்னை,

பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து வரும் தமிழகத்தில் வரும் ஜூன் 30-ந்தேதி அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29 அன்று கொண்டாடப்படவிருக்கும் நிலையில் ஜூன் 30 வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனச் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

ஜூலை 1 மற்றும் ஜூலை 2 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளிக் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் முஸ்லிம் அரசுப் பணியாளர்கள் ஆகியோர் தனது சொந்த ஊர்களுக்கு பண்டிகை கொண்டாடித் திரும்புவதில் சிரமம் இருக்காது. மேலும், ஒருசில கல்வி நிறுவனங்களில் ஜூன் 30 அன்று தேர்வுகளும் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜூன் 30-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்