தன்னிடம் உள்ளதை பிறருடன் பகிர்வேன் என்ற துறவு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது
காவிநிறம் என்பது ஒரு இயக்கத்தை சேர்ந்தது அல்ல, தன்னிடம் உள்ளதை பிறருடன் பகிர்வேன் என்ற துறவு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. என்று ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்தியாவின் எதிர்காலம்
திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர் மன்ற தோ்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதவி நியமன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு அவருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து அவா் பேசுகையில், "மாணவர்கள் ஜனநாயகத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டால் நல்ல வலிமையான மக்களாட்சி முறையை கொண்டுவர முடியும். 'சமுதாயத்தில் உள்ள நல்லவர்கள் தங்களை மெழுகுவர்த்தி போல் உருக்கி கொள்வதன் மூலமாக சாதாரண மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அவர் கூற்றுக்கேற்ப மாணவர்களாகிய நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது. ஆங்கிலம் தெரிந்துவிட்டால் இவ்வுலகில் அனைத்தும் தெரியும் என்று அர்த்தம் இல்லை.
ஆங்கிலம்-இந்தி
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான் தவிர அது சிந்தனையின் வெளிப்பாடு அல்ல. பிற மொழிகளை கற்றுக்கொண்டால் ஊரோடு மட்டுமல்லாமல் உலகத்தோடும் தொடர்பு கொண்டவர்களாக நாம் அனைவரும் மாறலாம். எனக்கு இந்தி மட்டும் தெரிந்திருந்தால் நான் மேலும் ஓர் சிகரத்தை எட்டிப்பிடித்திருப்பேன். எனவே மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் படித்து சிறந்த நிலைக்கு வர வேண்டும். காவி நிறம் என்பது ஒரு இயக்கத்தை சேர்ந்தது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை.
காவி என்பது என்னிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து கொள்வேன் என்கின்ற ஒரு துறவு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. ஒருவர் கூறும் கூற்றில் வாய்மை இருக்கிறதா? என்ற தேடல் இருக்கும் வரை இந்திய தேசத்தை உலகின் வேறு எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என்பதை மாணவர்களாகிய நீங்கள் உணர வேண்டும். கருப்பின பிரதமர் ஒருவர் நம் இந்திய பிரதமர் மோடியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். இது அவருக்கு மட்டும் பெருமையல்ல. நம் நாட்டிற்கே பெருமை. அவரை கட்சி தலைவராக பார்க்காமல் நாட்டின் பிரதமராக பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களுக்கு வாழ்த்து
பின்னர் பள்ளி மாணவர் மன்ற தோ்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவர்னரிடம் வாழ்த்து பெற்றனர். அதைத்தொடர்ந்து கிட்ஸ் கிளப் பள்ளிகளின் தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், இயக்குனர் ரமேஷ், முதல்வர் நிவேதிகா ஸ்ரீராம், செயலாளர் ஐஸ்வர்யா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.