வருவாய் கணக்கு தீர்வாயம் தொடங்கியது
நீடாமங்கலம், குடவாசல் பகுதியில் வருவாய் கணக்கு தீர்வாயம் தொடங்கியது.;
நீடாமங்கலம்:-
நீடாமங்கலம், குடவாசல் பகுதியில் வருவாய் கணக்கு தீர்வாயம் தொடங்கியது.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் 1431-ம் பசலிக்கான வருவாய் கணக்கு தீர்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது. இதில் வருவாய் கிராம கணக்குகளை மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் அழகர்சாமி ஆய்வு செய்தார். நீடாமங்கலம் சரகத்தில் உள்ள 20 கிராமங்களின் கணக்குகளையும் வருவாய் கோட்ட அலுவலர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களால் அளிக்கப்பட்ட 102 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. முன்னதாக நில அளவை உபகரணங்கள் சரியாக உள்ளதா? என வருவாய் கோட்ட அலுவலர் பார்வையிட்டார்.
அப்போது வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் கார்த்திக், தாசில்தார் ஷீலா, சமூகபாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜகணேசன், மண்டல துணை தாசில்தார் மகேஷ், ஊராட்சி ஒன்றிய ஆணையர் மணிமாறன், தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில், வட்ட வழங்கல் அலுவலர் கணேசன், தேர்தல் துணை தாசில்தார் ஜெயபாஸ்கர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வடுவூர் சரகம்
இன்று (வியாழக்கிழமை) வடுவூர் சரகம் முன்னாவல்கோட்டை, எடையூர் நத்தம் படுகை, செட்டிசத்திரம், புள்ளவராயன்குடிகாடு, மூவர்கோட்டை, வடுவூர் மேல்பாதி, வடுவூர் வடபாதி, வடுவூர் அக்ரஹாரம், வடுவூர் தென்பாதி உள்ளிட்ட 17 கிராமங்களுக்கும், நாளை (வெள்ளிக்கிழமை) கொரடாச்சேரி சரகத்தில் கமுகக்குடி, விஸ்வநாதபுரம், பத்தூர், மாங்குடி, ஊர்குடி, கிருஷ்ணன்கோட்டகம், பெருமாளகரம், களத்தூர், மேலாளவந்தசேரி, கீழாளவந்தசேரி, புதுத்தேவங்குடி, அன்னவாசல், அன்னவாசல்தென்பாதி, அரிச்சபுரம் உள்ளிட்ட 14 கிராமங்களுக்கும் வருவாய் கணக்கு தீர்வாயம் நடக்கிறது.
குடவாசல்
குடவாசல் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று வருவாய் கணக்கு தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் முன்னிலையில் நடந்தது. இதில் திருவீழிமிழலை, வருவாய் சரகதத்தை சேர்ந்த 21 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் கணக்கு முடிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் உஷாராணி, வருவாய் தீர்வாய கண்காணிப்பாளர் ஆராவமுதன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், துணை தாசில்தார் ஸ்டாலின், வட்ட வழங்கல் அலுவலர் சிவதாஸ், சமூக நலத்திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.