தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டியில் திருச்சி ஜமால்முகமது கல்லூரி சாம்பியன்
தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டியில் திருச்சி ஜமால்முகமது கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.
தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டியில் திருச்சி ஜமால்முகமது கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.
தென்னிந்திய ஆக்கி போட்டி
தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையே காஜாமியான் கோப்பை ஆக்கி போட்டி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்களாக நடந்தது. ஜமால் முகமது கல்லூரி உடற்கல்வித்துறை சார்பில் நடந்த இந்த போட்டியில் 18 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
இதில் நேற்று மாலை நடந்த இறுதி போட்டியில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரியும், சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணியும் பலபரீட்சை நடத்தின. தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ஜமால்முகமது கல்லூரி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தோல்வி அடைந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி 2-வது இடத்தை பிடித்தது.
3-வது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா கிறிஸ்ட் கல்லூரியை தோற்கடித்தது. முன்னதாக காலையில் நடந்த அரையிறுதி போட்டிகளில் ஜமால் முகமது கல்லூரி, கேரளா கிறிஸ்ட் கல்லூரியையும், சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி.கல்லூரி அணிகளை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பரிசளிப்பு விழா
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ஒலிம்பியன் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஜமால்முகமது கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன், செயலர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முகம்மது, உதவி செயலாளர் அப்துஸ்சமது, கவுரவ இயக்குனர் அப்துல் காதர் நிஹால், உடற்கல்வி இயக்குனர் ஷாயின்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.