குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இந்த பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் விஜயகுமார், நெடுமாறன், துணை தாசில்தார்கள் சுபிச்சந்தர், டி.ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் கே.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாபந்தி மேலாளர் கலைவாணி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் நாளான நேற்று பரதராமி, குடியாத்தம் நகரம், பிச்சனூர், கொண்டசமுத்திரம், செதுக்கரை, தாட்டிமானபல்லி, கல்லப்பாடி, ராமாலை, புட்டவாரிபல்லி, டி.பி.பாளையம், ரங்கசமுத்திரம், வீரிசெட்டிபல்லி, வரதாரெட்டிபல்லி, வி.டி.பாளையம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 60 பேர் ரேஷன் அட்டை, முதியோர் உதவித்தொகை, நில அளவை, பட்டாமாறுதல், வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நலத்திட்ட உதவிகள் கேட்டும் மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நில அளவை வட்ட துணை ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்க குடியாத்தம் வட்ட தலைவர் எம்.செந்தில், செயலாளர் ஆர்.சசிகுமார், பொருளாளர் காந்தி, வெங்கடாஜலபதி, ரகு, ஜெயமுருகன் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.