வண்டலூர், செய்யூரில் ஜமாபந்தி

வண்டலூர், செய்யூரில் ஜமாபந்தி தொடங்கியது.;

Update:2023-05-31 14:52 IST

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவில் ஜமாபந்தி வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று வண்டலூர் குறு வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு (ஜமாபந்தி) வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், வண்டலூர் தாசில்தார் பாலாஜி, காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வி.எஸ்.ஆராமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜமாபந்தியில் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி சி.மெய்யழகன் நேரடியாக செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், தாசில்தார் ஆகியோரிடம் அய்யஞ்சேரி ஏரி கலங்கல் பகுதியை சில சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலிகள் அமைத்துள்ளதாக இரண்டு முறை மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்று சரமாரியாக குற்றம் சாட்டினார்.

இதற்கு எம்.எல்.ஏ., 'உங்கள் புகாரை எழுத்துப்பூர்வமாக அதிகாரிகளிடம் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்' என்று கூறினார். இதனைத் தொடர்ந்து தி.மு.க. நிர்வாகி எழுத்துப்பூர்வமாக அய்யஞ்சேரி ஏரி ஆக்கிரமிப்பு பற்றி மனு கொடுத்தார். இதனால் ஜமாபந்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல வண்டலூர், மண்ணிவாக்கம், கீரப்பாக்கம், நெடுங்குன்றம், கிளாம்பாக்கம், ரத்தினமங்கலம், வேங்கடமங்கலம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, நிலம் அளவீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உத்தரவிட்டார்.

செய்யூர் பஜார் வீதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில், நேற்று ஜமாபந்தி தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பேபிஇந்திரா முன்னிலையில் 10 நாட்கள் நடைபெற உள்ள ஜமாபந்தியில், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். சித்தாமூர், சூனாம்பேடு கடப்பாக்கம் கயப்பாக்கம், கொடூர் லத்துார் செய்யூர்

உள்ளிட்ட 7 குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு, பத்து நாட்கள் நடைபெற உள்ளது. ஜமாபந்தி கூட்டத்தில் புதிய வீட்டுமனை பட்டா வேண்டுதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், புதிதாக முதியோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தல், இடையில் விடுபட்ட முதியோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பித்தல் என பல்வேறு கோரிக்கைகளை மக்கள் மனுவாக அளித்தனர்.

இதில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்