நிலவாரப்பட்டியில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை வீறுகொண்டு அடக்கிய காளையர்கள் 2 போலீஸ்காரர்கள் உள்பட 36 பேர் காயம்

சேலம் அருகே நிலவாரப்பட்டியில் நேற்று முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் வீறு கொண்டு அடக்கினர். 2 போலீஸ்காரர்கள் உள்பட 36 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-05-30 21:04 GMT

பனமரத்துப்பட்டி, 

முதன்முறையாக ஜல்லிக்கட்டு

சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் அனுமதி வழங்கப்பட்டது.

பரிசுகள்

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அங்கு தயாராக இருந்த மாடுபிடி வீரர்கள் வீறு கொண்டு அடக்க முயன்றனர். இதில் ஒரு சில காளைகள் மட்டும் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டது. பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை தட்டிச்சென்றன.

பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், தங்கக்காசு, வெள்ளிக்காசு உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் போலீஸ்காரர்கள் சோபன், பால சண்முகம் மற்றும் மாடு பிடிவீரர்கள் என மொத்தம் 36 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

உறுதிமொழி ஏற்பு

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியை மாடுபிடி வீரர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஜல்லிக்கட்டில், விலங்குகள் நலவாரிய ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல், சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் புருஷோத்தமன், சேலம் தாசில்தார் செம்மலை, மல்லூர் பேரூராட்சி தலைவர் லதா, துணைத்தலைவர் அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்