பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை-தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
தர்மபுரி:
பள்ளி மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
மாணவி பலாத்காரம்
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன் (வயது 34). லாரி டிரைவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடத்தி சென்றார். பின்னர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஏரியூர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
10 ஆண்டு சிறை தண்டனை
இதைத்தொடர்ந்து போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் அருள்செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்தது வந்தது. விசாரணையின் முடிவில் அருள்செல்வன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
இதையடுத்து அருள்செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பக்ரத்துல்லா நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.