பழனியில் விற்பனைக்காக குவியும் பலாப்பழங்கள்

பழனியில் விற்பனைக்காக பலாப்பழங்கள் குவிந்து வருகின்றன.

Update: 2023-04-28 21:00 GMT

பழனி பகுதியில் கொய்யா, மா, சப்போட்டா உள்ளிட்ட பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சீசன் காலத்தில் இவற்றை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து பழனி அடிவாரம் பகுதியில் வைத்து விற்பனை செய்வார்கள். அதேபோல் மலைப்பகுதியில் விளையும் பழ வகைகளும் அந்தந்த சீசன் காலத்தில் பழனிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், கேரளாவில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் கேரளாவில் இருந்து பழனிக்கு பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது.

கேரளாவில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக பலாப்பழங்களை வாங்கி வந்து, பழனியில் சாலையோர பகுதியில் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். பழனி அடிவார சாலை, திண்டுக்கல் சாலை ஆகிய இடங்களில் பலாப்பழம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ ரூ.20 என விற்கப்படுகிறது. பழனிக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் பலாப்பழங்களை வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து பலாப்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், பலா சீசன் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை இருக்கும். தற்போது கேரள மாநிலம் பாலக்காடு, ஆலுவா, திருச்சூர் பகுதியில் இருந்து அதிக அளவில் பலாப்பழம் வரத்து உள்ளது. கேரளா பலாப்பழம் கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. அதேவேளையில் பண்ருட்டி, புதுக்கோட்டை பலாப்பழம் என்றால் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்