இருக்கன்குடி மாரியம்மன் வீதி உலா கோலாகலம்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-11 18:45 GMT

இருக்கன்குடி

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆடி கடைசி வெள்ளி திருவிழா

தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும்.

இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடந்தாலும், ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா சிறப்பு பெற்றது.

இந்த திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். பாதயாத்திரையாகவும் ஏராளமானோர் வந்து, அம்மனை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டுக்கான ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பச்சைப்பட்டு உடுத்தி வீதிஉலா

ஆடி கடைசி வெள்ளி தினமான நேற்று விழாவின் சிகர நாளாகும். காலை முதலே அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

நேற்று மதியம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உற்சவர் மாரியம்மன் தங்க ரிஷப வாகனத்தில் பச்சைப்படுத்தி உடுத்தி எழுந்தருளி, வைப்பாற்றில் இறங்கினார். பின்னர் பக்தர்கள் வெள்ளத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்மன் பச்சை பட்டு உடுத்தி காட்சி அளித்ததால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆண்டுக்கு ஒருமுறைதான் இந்த வீதி உலா நடைபெறுவது வழக்கம்.

பின்னர் கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் வீற்றிருந்து அம்மன் அருள் பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேர்த்திக்கடன்

ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். அக்னி சட்டி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

தென் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் இருக்கன்குடிக்கு இயக்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்