சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தவறு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியது துரதிருஷ்டவசமானது, தவறானது என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2022-09-08 23:33 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசு பணிக்கான வேலைவாய்ப்பில் மொத்த இடங்களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு கடந்த 2016-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு வழங்க வேண்டும். மதிப்பெண் தகுதி அடிப்படையில் மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து, எம்.சதீஷ்குமார் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

சட்டவிரோதம் இல்லை

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், "இந்த இடஒதுக்கீடு சட்டவிரோதம் இல்லை. பெண்களுக்கு என்று சிறப்பு இடஒதுக்கீடு வழங்க அரசியல் அமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனை) சட்டத்தின்படி, 30 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியதில் எந்த தவறும் இல்லை" என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.சிங்காரவேலன் வாதம் செய்தார். அவர் கூறியதாவது:-

சமூக இடஒதுக்கீடு

பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம். இதன் மூலம் ஏற்கனவே 69 சதவீத இடஒதுக்கீட்டுடன், இந்த 30 சதவீதத்தை சேர்த்தால், மொத்தம் 99 சதவீதமாகி விடும். சுப்ரீம் கோர்ட்டு 9 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு 1992-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பின்படி, மொத்த இடங்களில், 50 சதவீதம் மிகாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரிதாக கூடுதல் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்புதான் இதுவரை அமலில் உள்ளது. இதன்படி, பார்க்கும்போது, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள சமூக ரீதியான இடஒதுக்கீடான 69 சதவீதத்துக்குள்தான் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியும்.

இரண்டு மடங்கு

உதாரணத்துக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 2 இடம் ஒதுக்கப்படுகிறது. ஒருவேளை அந்த 2 பெண்கள் மதிப்பெண் (மெரிட்) அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் தேர்வாகிவிட்டால், அத்துடன் விட்டு விடவேண்டும். மதிப்பெண் அடிப்படையில் 2 இடங்கள், இடஒதுக்கீடு அடிப்படையில் 2 இடங்கள் என்று ஒதுக்கப்பட்டால், பெண்களுக்கு 4 இடங்கள் கிடைக்கும். இது நிர்ணயிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக மாறிவிடும். எனவே, 30 சதவீதம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கிய சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

துரதிருஷ்டவசமானது

இதேபோல பிற மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், வக்கீல் தாட்சாயினி ரெட்டி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக ரீதியான இடஒதுக்கீட்டுக்குள்தான், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிற பிரிவினர்களுக்கு உள்ஒதுக்கீட்டு வழங்க வேண்டும். அதை மீறி ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகமும் செயல்பட்டது துரதிருஷ்டவசமானது. தவறானது.

அதிக வாய்ப்புகள்

டி.என்.பி.எஸ்.சி.,யும், தமிழ்நாடு அரசும் முதலில் பெண்களுக்கு 30 சதவீத இடங்களை வழங்கி விட்டு, அதன்பின்னர் சமூக ரீதியான இடஒதுக்கீட்டை பின்பற்றியுள்ளது. இதனால், அரசு வேலைவாய்ப்பில் ஏராளமான பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் வகுத்துள்ள நடைமுறையை பின்பற்றி இடஒதுக்கீட்டு பட்டியலை தயாரிக்க வேண்டும். அதாவது சாதி அடிப்படையில் இல்லாமல், தகுதி அடிப்படையில் முதலில் 31 சதவீத பொதுப்பிரிவினரின் பட்டியலை தயாரிக்க வேண்டும்.

விரும்பவில்லை

இந்த முதல் பட்டியலில் இடம் பெற்றவர்களின் சாதியை கருத்தில் கொள்ளாமல், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் என்று சமூக ரீதியாக 69 சதவீத இடஒதுக்கீடு பட்டியலை தயாரிக்க வேண்டும். இந்த இடஒதுக்கீட்டுற்குள் தான் பெண்கள், மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆனால், இதற்கு மாறாக பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், அரசு பணி நியமனத்தில் அதிக பெண்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களது பணி நியமனத்தை எல்லாம் ரத்துசெய்ய நாங்கள் விரும்பவில்லை.

திருத்தம்

அதேநேரம், எதிர்காலத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, சமூக இடஒதுக்கீட்டிற்குள் தான் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இதற்காக விதிகளை திருத்தம் செய்யவேண்டும். மேற்சொன்ன இந்த விளக்கத்தின் அடிப்படையில் இந்த வழக்குகள் எல்லாம் பைசல் செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்