அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை அறிவித்தது காட்டுமிராண்டித்தனம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை அறிவித்தது காட்டுமிராண்டித்தனம்

Update: 2023-09-06 20:42 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை அறிவித்து காட்டுமிராண்டித்தனம் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காட்டுமிராண்டித்தனம்

அடுத்தவர்களின் மத உணர்வுகளைப்பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு. அதற்காக அவருடைய தலைக்கு விலை பேசியது அதை விட காட்டுமிராண்டித்தனம்.

அவரது தாத்தா கருணாநிதி, தந்தையும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்து மதம், கோவில், கடவுள் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள். ஆனால் அவர்களது குடும்பத்தினர் கோவிலை சுற்றி வலம் வருவார்கள்.

திரும்பப்பெற வேண்டும்

அவர்கள் உள்ளொன்றும், வெளியொன்றும் வைத்துக்கொண்டு வேஷம் போடுவதுபோல், அரசியலிலும் வேஷம் போடுகிறார்கள். அதனால் விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுப் பிள்ளை போல் பேசியதை யாரும் ெபரிதாக எடுத்துக்கொள்ள அவசியம் கிடையாது.

ஆனால் இதுவே இங்கு வேறு ஆட்சி இருந்தால், அவர் மீது வழக்கு தொடர்ந்திருப்பார்கள். தமிழகத்தில் அவர்களது ஆட்சி இருப்பதால், விட்டு விட்டார்கள். எனவே சனாதனத்தை பற்றிப் பேசியதை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரும்பப்பெற வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் பண்டிகையின்போது, மலையாளத்தில் வாழ்த்து சொல்லியுள்ளார். இதன் மூலம் பிராமணர்களை மறைமுகமாக வாழ்த்தியிருப்பது தெரிய வருகிறது. இதனால் அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்.

கடவுள் பக்தியைக் கூட துணிந்து காண்பிக்கக்கூடிய தைரியமில்லாதவர்கள். ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கவேண்டும் என்பது தான் அவர்களது ஒரே எண்ணம்.

சாத்தான் வேதம் ஓதுவதுபோல்...

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பச்சோந்தி போல் பேசி வருகிறார். மத்திய அரசு எது செய்தாலும், மக்களின் கருத்தைப்பெற்று அதன்படி நிறைவேற்ற வேண்டும். வரும் தேர்தலுக்குள் இந்தச் சட்டத்தைக் கொண்டு வர முடியாது.

எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. முதலில் கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளையைப் பற்றி அரசு கண்டு பிடிக்க வேண்டும் என்று அவர் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பது வரலாறாகும்.

தனித்து போட்டியிட தயார்

குறுவை நெற்பயிர்கள் காய்ந்து வருவதால், தமிழக அரசு டெல்டா பகுதியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். அ.ம.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம்.

ஒரு வேளை தேர்தல் நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு சென்றால், நட்பு ரீதியாக நீங்கள் அங்கு இருங்கள். நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம் எனக்கூறிவிடுவேன். எங்களைப்பொறுத்தவரை தீய சக்தி, துரோக சக்தி வரக்கூடாது என்பது தான்.

வழக்கு தொடர்ந்துள்ளேன்

எனக்கு விதிக்கப்பட்ட அபராதம் தவறு என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அபராதம் செலுத்தினால் தவறு செய்தவர்களாகி விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில துணைபொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், இளைஞரணி துணை செயலாளர் ஏழுபட்டி பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்