'கோவை புறக்கணிக்கப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது' - தி.மு.க. எம்.பி. கனிமொழி

மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.;

Update: 2024-02-10 15:41 GMT

கோவை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில், தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., குமரியில் தொடங்கி மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருவதாக கூறினார். தேர்தல் அறிக்கையில் தி.மு.க. முன்வைத்த அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் மின் கட்டண உயர்வு தொடர்பாக பலமுறை தொழில்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கனிமொழி எம்.பி. உறுதியளித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்