இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் முழு உடல் நலனோடு பணியாற்றுவது காலத்தின் தேவை - வைகோ
இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் முழு உடல் நலனோடு பணியாற்றுவது காலத்தின் தேவை என்று வைகோ கூறியுள்ளார்.;
சென்னை,
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக மு.க ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முழு நலம் பெற வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு நலம் பெற வேண்டும். அவர் முதலமைச்சர் பதவி ஏற்றதிலிருந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவில்லை. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். வாரத்தில் ஒரு நாளாவது அவர் ஓய்வு எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தமிழ்நாட்டு நன்மைக்காக, இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அவர் முழு உடல் நலனோடு பணியாற்றுவது காலத்தின் தேவையாகும்.
அவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓய்வு எடுக்கிறார். அவருடைய உடல்நலத்தை மனதில் கருதி, திராவிட முன்னேற்றக் கழக முன்னோடிகள், மாவட்டச் செயலாளர்கள் அவரது உழைப்பை நாட்டுக்காகப் பயன்படுத்தும் வேளையில் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மறந்துவிடக் கூடாது. அவர் விரைவில் முழு நலம் பெற்று தமிழகத்திற்கு பணியாற்ற இயற்கையை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.