நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது அநாகரிகமான செயல்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது அநாகரிகமான செயல் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2023-05-27 18:45 GMT

கோவில்பட்டி:

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது அநாகரிகமான செயல் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, கோவில்பட்டி யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், பொருளாளர் வேலுமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு

கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. பள்ளி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது. கள்ளச் சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர் உறவினர் இல்லங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை பார்க்கும் போது தி.மு.க. என்பது வன்முறை கலாசார கட்சி என்று நிரூபித்து உள்ளது. இதற்கு தகுந்த பலனை அடைவார்கள். ஒன்றுபட்ட அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோவில்பட்டியில் 29-ந் தேதி (அதாவது நாளை) நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலந்து கொள்கிறார்கள். நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது அநாகரிகமான செயல். இதில் அரசியல் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்