"கவர்னராக இருந்து கொண்டு சனாதன தர்மம் குறித்து பேசியது கண்டனத்திற்குரியது" - பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. சதி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.;
சென்னை,
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, "வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது" என்று பேசினார்.
காவர்னரின் இந்த பேச்சுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவர்னராக இருந்து கொண்டு சனாதன தர்மம் குறித்து பேசியது கண்டனத்திற்குரியது என்றும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. சதி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அறநிலையத்துறையின் கீழ் சிதம்பரம் நடராஜர் கோவிலை கொண்டு வரும் வகையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.