காவிரியில் தண்ணீர் கேட்பது நமது உரிமை -அமைச்சர் துரைமுருகன் பேட்டி

காவிரியில் தண்ணீர் கேட்பது நமது உரிமை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Update: 2023-09-16 00:16 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சுமார் 2,000 பெண்களுக்கு உரிமைத் தொகையை வழங்கி பேசினார்.

முன்னதாக அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரியில் கையளவு தண்ணீர் இருந்தாலும் அதை தமிழகத்திற்கு பங்கிட்டுத் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. கர்நாடகாவிடம் காவிரியில் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல. நமது உரிமை. மேலும் அது உச்சநீதிமன்றத்தால் அறிவித்து சொல்லப்பட்ட உரிமை.

கையளவு தண்ணீர் இருந்தாலும்...

கர்நாடக அரசு இப்போது தண்ணீர் இல்லை என்கிறது. அதற்காக மழை வந்து அதிகளவில் தண்ணீர் வந்தால் தான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க முடியும், குறைந்த தண்ணீர் உள்ளபோது கொடுக்க முடியாது' என்று சொல்ல முடியாது. காவிரியில் கையளவு தண்ணீர் இருந்தாலும் அதை எங்களுக்குப் பங்கிட்டுத் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது. ஆனால், கர்நாடக அரசு ஆங்காங்கே அணைகளில் தண்ணீரை நிறுத்தி வைத்துக் கொண்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையிலும், மற்ற அணைக்கட்டுகளிலும் தண்ணீரை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உத்தரவை மீறுவதாகும்

ஆகையால் இருக்கிற தண்ணீரில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் தர வேண்டும் என்று நாங்கள் கர்நாடக அரசிடம் கேட்கவில்லை. நாங்கள் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கேட்டோம். அவர்கள் உடனே கண்ணை மூடிக் கொண்டு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீரைக் கொடுக்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்.

ஏனென்றால், காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டு மாநிலத்திற்கும் பொதுவானவர்கள். அவர்கள் கர்நாடக மாநிலத்தின் அணைகளில் இருக்கக்கூடிய இருப்புகளைக் கணக்கிட்டு 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை தரலாம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளார்கள். ஆகையால், அந்த தண்ணீரை விடமாட்டேன் என்று சொல்வது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கான்ஸ்டியூசன் அத்தாரிட்டி உத்தரவை மீறுவதாகும். இந்தப் போக்கு சரியானது அல்ல.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்